×

புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!!

புதுச்சேரி: புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. புதுச்சேரி முத்தியால்பேட்டையை சேர்ந்த 9 வயது சிறுமி கடந்த மார்ச் மாதம் 2ம் தேதி வீட்டின் அருகே விளையாடி கொண்டிருந்தபோது, திடீரென மாயமானர். சம்பவம் குறித்து முத்தியால்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், 5ம் தேதி அதே பகுதியில் உள்ள கழிவு நீர் வாய்க்காலில் இருந்து சிறுமியின் உடலை சடலமாக போலீசார் மீட்டனர். போலீசாரின் தீவிர விசாரணையில் அதே பகுதியை சேர்ந்த விவேகானந்தன் (59) என்ற முதியவரும், கருணாஸ் (18) என்ற இளைஞரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்தது தெரியவந்தது.

இதையடுத்து இருவரும் கடந்த மார்ச் 6ம் தேதி கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதனிடையே சிறுமி உடலை பிரதே பரிசோதனை செய்த ஜிப்மர் மருத்துவமனை அதன் அறிக்கையினை போலீசாருக்கு அளித்தனர். இந்நிலையில், 9 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரி போக்சோ நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகையை முத்தியால்பேட்டை போலீசார் தாக்கல் செய்தனர்.

80 சாட்சிகளின் வாக்குமூலத்துடன் 500 பக்க குற்றப்பத்திரிக்கையை கிழக்கு கண்காணிப்பாளர் லட்சுமி சவுஜன்யா, ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் புதுச்சேரி நீதிமன்ற வளாகத்தில் உள்ள போஸ்கோ விரைவு நீதிமன்ற நீதிபதியிடம் தாக்கல் செய்தனர். சிறுமியின் ரத்த ஆடைகள், சடலத்தில் சேகரிக்கப்பட்ட மாதிரிகள், கைரேகை தடயங்கள் தாக்கல் செய்யப்பட்டன. ஜிப்மர் நிர்வாக உடற்கூறு பரிசோதனை அறிக்கை, டிஎன்ஏ அறிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையானது விரைவில் முடிவடைந்து 2 குற்றவாளிகளுக்கும் விரைவில் நீதிபதி தீர்ப்பளிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

The post புதுச்சேரி சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட வழக்கில் நீதிமன்றத்தில் 500 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Muthialpettai ,Dinakaran ,
× RELATED புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு எச்சரிக்கை